ஆடைத் தேர்வில் மகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை!

ஆடைத் தேர்வில் மகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை!



'ஆள் பாதி ஆடை பாதி' என்பதில் பெரியவர்கள் மட்டுமல்ல, இப்போதெல்லாம் குழந்தைகளும் கவனமாக இருக்கிறார்கள். குறிப்பாக, பெண் குழந்தைகள். 'பட்டுப் பாவாடை போட்டு என் பொண்ணுக்கு அழகு பார்க்கணும்' என்று அப்பா சொல்ல, 'இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரிதான் நான் என் பொண்ணை வளர்ப்பேன். அவள் ஷார்ட்ஸ் போட்டுக்கட்டும்' என்று அம்மா சொல்ல, ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் பெற்றோரின் விருப்பத்துக்கு ஏற்ப உடை உடுத்துவார்கள், குட்டீஸ். அதன்பிறகு, ஆடைத் தேர்வில் அதகளப்படுத்துவார்கள். 'இந்த பேன்டுக்கு இந்த டாப் வேண்டவே வேண்டாம்', 'இந்த கலர் எனக்குப் பிடிக்கல' என்று அடம்பிடிப்பார்கள். ஆடைத் தேர்வில் உங்கள் மகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே...

* இப்போதெல்லாம் ஐந்து, ஆறு வயதைத் தாண்டியவுடன், குழந்தைகள் தங்களுக்கான ஆடையை அவர்களே தேர்வு செய்துகொள்கிறார்கள். இதனை வித்தியாசமாக  பார்க்காதீர்கள். அதேசமயம், 'பாரேன்! என் பொண்ணு, அவளுக்கு என்ன வேணும்னு எவ்ளோ தெளிவா இருக்கா’ என்று அவள் முன் பெருமையாகவும் மற்றவர்களிடம்  கூறாதீர்கள். அப்படிச் செய்தால், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும் என்று அவள் நினைக்கத் துவங்கிவிடுவாள். இந்த மனோபாவம், அவள்  வளர்ந்த பிறகும் தொடர்ந்தால் அவளுக்குதான் சிக்கல்.  உங்கள் மகள் துணிக் கடைக்குச் செல்லும்போது, ‘நான்தான் எனக்கு டிரெஸ்  செலக்ட் பண்ணுவேன்’, ‘எனக்கு ரெட் கலர் டிரெஸ்தான் வேணும்’ என்று கூறினால், அனுமதியுங்கள். அதனை இயல்பாகக் கையாளுங்கள்.

* என்னதான் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சினிமா வாசத்திலிருந்து தள்ளி வைத்தாலும், அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் பெரும் பங்காற்றுகிறது  வெள்ளித்திரை. 'அந்தப்  பாட்டுல சமந்தா அக்கா போட்ட மினி ஸ்கர்ட் மாதிரி டிரெஸ் வேணும்மா’, ‘இந்த  கெட்ட-அப்ல நயன்தாரா செம்மயா இருக்காங்கம்மா; அதே  மாதிரிதான் எனக்கும் டிரெஸ் வேணும்' என்று குட்டீஸ் குதிப்பார்கள். அதுபோன்ற சுழல்களில், 'மினி ஸ்கர்ட் வேண்டாம்... ஆனா இதே டாட்டட் பேட்டர்ன்ல மிட் லெங்த் ஸ்கர்ட் வாங்குவோம்' என்று அதை ஒத்த நாகரிகமான ஆடைகளை வாங்கித் தரலாம்.

*பதின் பருவம் என்பது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு அல்ல... மிகவும் அடர்த்தியான கோடு! மனதில்  தோன்றும் அனைத்தையும் செய்து பார்க்க வேண்டும் எனத் துடிக்கும் வயது. குறிப்பாக, இந்த வயதிலுள்ள இளம்பெண்கள், தங்களை அலங்கரித்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். 'மற்றவர்கள் வியக்கும்படி ஆடை அணிய வேண்டும்' என்ற ஆர்வம் அவர்களுக்கு இருக்கும். அதனால்தான், எத்தனை ஆடைகள் இருந்தாலும், ‘எனக்குப் போடறதுக்கு டிரெஸ்ஸே இல்லம்மா’ என்று புலம்புவார்கள். இந்தச் சமயத்தில்தான், உங்களின் உதவி அவர்களுக்குத் தேவை. ஆடைகளின் டிரெண்ட் பற்றி நீங்கள் அப்டேட்டாகி, அவர்களுக்கு உதவுங்கள்.

* எந்த இடத்துக்கு எந்த மாதிரியான ஆடைகளை அணிந்து செல்வது என உங்கள் மகளுக்கு கற்றுக்கொடுங்கள். தோழியின் வீடு, பேர்த்டே பார்ட்டி என்று செல்லும் இடங்களுக்கு ஏற்ப நவீனமாக ஆடை அணிய வேண்டிய விருப்பமும் அவசியமும் அவர்களுக்கு இருக்கும். அதே சமயம், நம்முடைய கலாசாரத்துக்குத் தகுந்தபடி அவர்களை உடுத்தவும் பழக்குங்கள். உதாரணமாக, ஜீன்ஸ், டி-ஷர்ட் ட்யூஷனுக்கு ஓ.கே. அதே சமயம், கோயில், திருமணம் என்று செல்லும்போது சுடிதார், பட்டுப் பாவாடை என்று அணியப் பழக்கலாம். ஏற்றுக்கொண்டால், மகிழ்ச்சி. மறுத்தால் கால அவகாசம் கொடுத்து அமைதியான வழியில் புரிய வையுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் மகள் எந்த வயதில் இருந்தாலும், அவளுக்குப் பிடித்தமானதாக, வசதியாக உணரும் ஆடைகளை அணியும் சுதந்திரத்தை அவளுக்குக் கொடுங்கள்.  ஒருவேளை, செல்லும் இடங்களில் தன் ஆடைகளால் அவள் சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்தால், அதற்குத் தீர்வு காண அவளுக்கு உதவுங்கள்.

நமக்குதான் ஆடை ஓர்  அடையாளம். ஆடைக்கு நாம் அடையாளம் அல்ல! 

குழந்தை வளர்ப்பின் 10 அவசிய வழிகாட்டுதல்கள்

குழந்தை வளர்ப்பின் 10 அவசிய வழிகாட்டுதல்கள்


இன்றைய குழந்தைகளுக்கு 'அட்வைஸ்' என்பதே ஆகாத விஷயமாக இருக்கிறது. முந்தைய தலைமுறையினர், அடுத்த பத்தாண்டுகளுக்கு எப்படி வாழவேண்டும் என்பதைக் குறிக்கோள் அமைத்து வாழ்க்கை நடத்தியவர்கள். இன்றைய குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திட்டம் அமைகிறது. பிரச்னைகள் வந்தால், 'பார்த்துக்கொள்கிறேன்' என தைரியமாகச் சொல்ல முடிகிறது. புதிதாக வந்து இறங்கும் டெக்னாலஜி எல்லாம் ஓரிரு நாட்களில் அப்டேட் இல்லாததாகிவிடுகிறது. அடுத்த வருஷம் என்ன நடக்கும் என்றே சொல்ல முடிவதில்லை.

எதிலும் பர்ஃபெக்ட் பார்க்கவே கூடாது. எனக்கு பிடித்ததைச் செய்வேன். என்னால் முடிந்ததைச் செய்வேன் என்ற ஐடியாலஜியில் கண்கட்டவைக்கின்றனர். அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கும்போதே காதைப் பொத்திக்கொண்டு ஓட்டம் எடுக்கின்றனர். 'எதிர்காலம் பற்றிய எந்த இலக்குமே இல்லாமல் இருக்கானே' என்ற பதைபதைப்பு பெற்றோர் மனதில் உருவாகக் காரணமாக இருக்கும் குழந்தைகளை எப்படி வளர்த்தெடுக்கலாம் என்பதைச் சொல்கிறார், சேலம் சரவணக்குமார்.

சேலம் சரவணக்குமார்* குழந்தைகளிடம் வார்த்தையால் பேசக் கூடாது. செயலால் பேச வேண்டும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகள் எழ வேண்டும் எனில், அதற்கு முன் பெற்றோர் எழுவதை வழக்கப்படுத்தவும்.

* எந்த ஒரு இடத்துக்குச் செல்லும்போதும் பெற்றோர் குறித்த நேரத்துக்குச் செல்வது நேரமேலாண்மையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்.

* தன் பொருளாதார நிலை, குடும்ப நிலை என்ன, பெற்றோர் தங்களது கனவு என்ன, இன்னும் ஐந்து ஆண்டில் நான் என்னவாகப்போகிறேன். அதற்காக நான் இப்போது எப்படி உழைக்கிறேன் என்பதை அட்வைசாக இல்லாமல், தங்களது அனுபவத்தின் வழியே குழந்தைகளுக்குத் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். தனது கனவு என்ன என்று குழந்தைகளுக்குள் ஒரு தேடல் துவங்கும்.

* குழந்தைகளுக்கான குறிக்கோள், நோக்கம் என்பதை விளையாட்டின்மூலம் புரியவைக்கலாம். விளையாட்டில் அவர்கள் இலக்கை எட்டி வெற்றியின் ருசியைப் புரிந்துகொள்கின்றனர். 'ஐந்து ஆண்டுகளுக்கு பின் நீ எப்படி இருப்பாய்' என்ற கோல் சார்ட் தயார்செய்யச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் கனவுகள் படங்களாகவும், வண்ணங்களாகவும் இடம்பெறும். அதை, அவர்கள் பார்வையில் படும்படி மாட்டிவைக்கலாம். தினமும் அதைப் பார்க்கும்போது அந்தக் கனவுக்காகவும் உழைக்கத் துவங்குவார்கள்.

* குழந்தைகளிடம் அடுத்த ஐந்து ஆண்டில் இந்தச் சமூகம் உன்னை எப்படிப் பார்க்க வேண்டும்., இன்னும் 10 ஆண்டுகளில் இந்த சமூகத்திடம் உன்னை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை எழுதிக் காட்டச் சொல்லவும். இதற்காகவே வீட்டில் ஒரு போர்டு, சாக்பீஸ் வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் மனதைப் புரிந்துகொள்ள, கனவுகள் சிறகடிக்க வாய்ப்பு உருவாகும்.

* வீட்டில், குழந்தைகள் முன் செய்தித்தாள் படிப்பது, புத்தகம் வாசிக்கும் பழக்கம் பெற்றோருக்கு வேண்டும். குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாதல் ஆகியவற்றை அவர்களுக்குப் புரிந்த மொழியில் விவாதிக்க வேண்டும். அதுபற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அந்தச் சமயத்தில் என்ன செய்திருக்கலாம் என்பதையும் கருத்துக் கேட்பதுபோல விழிப்புணர்வை உண்டாக்க முடியும்.

* மாதம் ஒரு முறை குழந்தைகளிடம் உள்ள தேவையற்ற பொருள்களைப் பட்டியலிடச் சொல்லுங்கள். அவற்றைப் பயன்படும் குழந்தைகளுக்குத் தர  குழந்தை-அம்மாஊக்கப்படுத்தலாம். ஆதரவற்ற இல்லங்களுக்கு அழைத்துச்செல்வதன் வழியாக குழந்தைகள் நிலை குறித்து உணர்த்தலாம். ஆசைக்காகப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் மாறி, உதவும் எண்ணம் உருவாகும்.

* உணவை வீணாக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக உணவு உற்பத்திசெய்யப்படும் விவசாய நிலத்தைப் பார்வையிடச் செய்யலாம். உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வார்கள். இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சம், தண்ணீருக்கு மக்கள் படும் அவலத்தையும் உணர்த்துங்கள். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள்.

* ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைக் குழந்தைகள் விரும்பிக் கேட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள், அது தயாரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், அதில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்கள் நாளடைவில் ஏற்படுத்த இருக்கும் விளைவுகளையும் விளக்கலாம்.

* இன்றைய குழந்தைகளிடம், பொதுவாக எதையும் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்வதும். அட்வைஸ் செய்வதும் அபத்தமானது. எதையும் நேரடியாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பளிக்கலாம். விளக்கமாகச் சொல்லிப் புரியவைக்கலாம். அந்தந்த விஷயங்கள் பற்றி அவர்களின் கருத்துகளையும் கேட்டுக்கொள்வது அவசியம்.

குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த எளிமையான 10 வழிகள்!

குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த எளிமையான 10 வழிகள்!



''பள்ளிப் பாடப்புத்தகங்களை படிப்பதையே சிரமமாக நினைக்கும் குழந்தைகளுக்கு, மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது சவாலான விஷயம்தான். ஆனால், பெற்றோர் கொஞ்சம் மனதுவைத்தால், அந்த ஆர்வத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும்'' என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர், ப்ரீத்தா நிலா. அதற்கான 10 வழிகளையும் கூறுகிறார்.

* சிறு வயது முதலே குழந்தைகளுக்குப் பிடித்த விலங்குகள், பழங்கள், பொதுஅறிவு தகவல்கள் உள்ளிட்டவற்றை எளிமையான படக்கதைகளாக சொல்லிக்கொடுப்பது, அவர்கள் மனதில் நன்றாகப் பதியும். ஆரம்பக் கட்டத்திலேயே கருத்துள்ள விஷயங்களைப் படிக்கச் சொன்னால், குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதனால், அவர்களுக்குப் பிடித்தமான ஸ்பைடர்மேன், கார்ட்டூன் படங்கள், பிக்சர் கார்டுகள் வாயிலாக வாசிப்புப் பழக்கத்தை ஆரம்பியுங்கள். பின்னர், அவர்களாகவே ஆர்வமுடன் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

* தினமும் இரவு நேரங்களில் நேரம் ஒதுக்கி, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்தக் கதைகள், குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு, விலங்குகள் பற்றியதாகவும் குழந்தைகளை மையப்படுத்திய நீதிக் கதைகளாகவும் சொன்னால், அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். முக பாவனைகளுடன், கை கால் நடன அசைவுகளுடன் கதைகளைச் சொல்லும்போது, குழந்தைகள் தினமும் ஆர்வமுடன் கதைகளைக் கேட்பார்கள்.

* நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து பிடித்த விஷயங்களைப் படித்து, படித்ததை மற்றவர்கள் முன்னிலையில் ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னால், ஆர்வமாகப் படிப்பார்கள். இதனால், ஒருவர் கற்றுக்கொண்ட விஷயம், எளிதாக மற்றவர்களுக்கும் தெரியவரும். இத்தகைய கூட்டுமனப்பான்மை, அந்தக் குழந்தைகள் பெரியவர்களாக ஆகும்போது, குரூப் ஸ்டெடி போன்ற விஷயங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். தயக்கம், தடுமாற்றம் போன்ற குணங்களையும் விரட்டி அடிக்கும்.

* ஒவ்வொரு குழந்தைக்கும் விளையாட்டு, அறிவியல், பொதுஅறிவு, சுற்றுலா என ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அத்தகைய துறை சார்ந்த, அத்துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் பற்றிய புத்தகங்கள், அவர்களின் வரலாறு சொல்லும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது, குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

* அழகாகக் காட்சிப்படுத்துவதும், அலங்கரிப்பதும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். வீட்டிலேயே அழகான வடிவில் ஒரு ரேக் அமைத்து அதில் குழந்தைகளுக்குப் பிடித்த புத்தகங்களைக் காட்சிப்படுத்தினால், புத்தகம் படிக்கும் பழக்கம் இயல்பாகவே வரும். மேலும், குழந்தைகள் ஒரு புத்தகத்தைப் படித்த பின்னர், அவர்கள் படித்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும்போது உற்சாகமாவார்கள்.

* தினமும் வாசிப்பு நேரம் எனக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி, குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்து, மற்றவர்களிடம் பகிரலாம். குழந்தைகள் படித்ததில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். அப்படிச் செய்யும்போது அப்பா, அம்மாவே படிக்கிறார்கள். நம்முடன் சந்தோஷமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என ஆர்வமுடன் குழந்தைகளும் படிப்பார்கள்.

* தினமும் காலை நேரங்களில் செய்தித்தாளை படித்து முடித்ததும், முக்கியமான செய்திகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். பல விஷயங்களையும் அவர்களிடம் விவாதிக்கலாம். தொடர்ந்து குழந்தைகளை செய்தித்தாளைப் படித்து தங்களிடம் விவாதிக்குமாறு சொல்லலாம்.

* செய்தித்தாள்களில் பார்த்த, பயனுள்ள, பிடித்த படங்களுடன் கூடிய விஷயங்களைக் கத்தரித்து, தனி நோட்டில் ஒட்டிவைத்து, அவ்வப்போது பார்க்கச் சொன்னால், குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். அப்படியே நல்ல விஷயங்களைப் படிக்க ஆரம்பிப்பார்கள்.

* ஓய்வு நேரங்களில் குழந்தைகளை வெளியிடங்களுக்கு, சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் பார்த்த, ரசித்த, பிடித்த பயண விஷயங்களைக் கதையாகவோ, கவிதையாகவோ எழுதச் சொன்னால், ஆர்வமாக எழுதுவார்கள். அந்த எழுத்து, பயண அனுபவங்களைப் பெற்றோர் படித்து, ஊக்குவித்து அதுசார்ந்த புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொல்லலாம்.

* ஓய்வு நேரங்களில் அல்லது மாதம் ஒருமுறையாவது நூலகம் அழைத்துச்சென்று பெற்றோரும் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். குழந்தைகளையும் நூலக உறுப்பினராக்கி, அவர்களுக்குப் பிடித்த நூல்களை வீட்டுக்கு எடுத்துவந்து படிக்கப் பழக்கப்படுத்தலாம்.

''மேற்கண்ட 10 வழிமுறைகளையும் குழந்தைகள் கடைப்பிடிக்க, பெற்றோர் நேரம் ஒதுக்கினால் மட்டுமே சாத்தியமாகும். தற்போது, பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகளும் கேட்ஜெட்டில் அதிகம் நேரம் செலவழிக்கிறார்கள். அது, குழந்தைகளின் கண்பார்வைத் திறனை பாதிக்கும். எனவே, பெற்றோர்கள் சுயகட்டுபாட்டுடன் இருந்து, குழந்தைகள் கண் எதிரில் புத்தகம் படித்தால்தான் அவர்களும் புத்தகத்தின் பக்கம் திரும்புவார்கள்

பரிசு - குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்?

பரிசு... குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்?



''பரிசு... பொருளாக, வார்த்தையாக, சிறிது நேரம் உடன் செலவிடுவதாக என எதுவாகவும் இருக்கலாம். இத்தகைய பரிசுகள் அனைவரையும் உற்சாகப்படுத்தும். குழந்தைகளையோ மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டுசெல்லும்'' என்கிறார், குழந்தைகள் நல ஆர்வலர் பிரீத்தா நிலா. பெற்றோர் கொடுக்கும் பரிசு, குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கும் என்பதையும் விளக்குகிறார்.

''பரிசு என்றாலே, குழந்தைகள் முகம் புன்னகையில் மலரும். சந்தோஷத்தில் அவர்கள் உள்ளம் தவழும். பரிசுகள் குழந்தைகளை மேலும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும். கடையில் வாங்கிக்கொடுப்பதைத் தாண்டி, அதிக பொருட்செலவு இல்லாமல், பெற்றோர்கள் தங்கள் கைகளால் செய்துக்கொடுக்கும் பரிசுகளைக் குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள். அது, காகிதத்தில் வரைந்த ஓவியம், களிமண்ணால் செய்த சிறு பொம்மை, அட்டைப்பெட்டியில் செய்த வீடு என எதுவாகவும் இருக்கலாம். சிறு உண்டியல் கொடுத்து சேமிக்கக் கற்றுக்கொடுப்பது, வண்ணப் பென்சில்கள், அழிப்பான் வாங்கிக் கொடுப்பது, குழந்தைக்குப் பிடித்த துறை சார்ந்த முன்னேற்றத்துக்கு உதவும் பொருளாக என இருக்கலாம். இவற்றை கொடுக்க அதிக பொருட்செலவோ, நேரமோ தேவையில்லை.

பெற்றோர் கொடுக்கும் பரிசுப் பொருட்களின் விலையை மதிப்பீடு செய்யும் பழக்கம் குழந்தைகளுக்கு இருக்காது. அன்பையும் பாசத்தையும் மட்டுமே பார்ப்பார்கள். அதனால், என்ன பரிசு, எவ்வளவு விலையுள்ள பரிசு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஆனால், அந்தப் பரிசு அவர்களின் வளர்ச்சிக்கு சிறிய பங்கை ஆற்றும் வகையில் இருக்க வேண்டும். அன்பான ஒரு கைகுலுக்கல், கட்டியணைத்தல், முத்தமிடுதல், சிறிது நேரம் குழந்தைகளோடு செலவிடுவது ஆகியவையும் உயர்ந்த பரிசுகளே. இதனால், சிறு தாவரங்கள், செடிகள், பறவைகள் போன்ற உயிர்ப்புள்ள செயல்பாடுகள் மீது குழந்தைகள் அளவற்ற அன்பைச் செலுத்துவார்கள்.

தன் வளர்ப்பால் செடியில் ஒரு பூ மலர்வது, குருவி முட்டையிட்டு குஞ்சுப் பொறிப்பதைப் பார்ப்பதும் அர்த்தமுள்ள செயல்பாடுகளைச் செய்ய குழந்தைகளைத் தூண்டும். தன் பொழுதுபோக்கும்கூட பயனுள்ள விதத்தில் இருக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டும். குழந்தைக்கு வாசிக்கும் பழக்கம் பிடிக்கும் என்றால், அவர்களை நல்வழிப்படுத்தும் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். வாசிப்பு பழக்கமே இல்லாத குழந்தைகளுக்கும் புத்தகங்களைப் பரிசாக கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கலாம். சகோதர, சகோதரிகள் அல்லது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர்களுடன் இணைந்து ஆளுக்கு ஒரு புத்தகம் படித்து, தான் படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பழக்கப்படுத்தலாம். இவையெல்லாம் கூட்டுமனப்பான்மையை வளர்க்கும். ஒருவர் கற்ற அறிவு, மற்றவர்களிடம் பரவ வழிசெய்யும்.

பரிசுப் பொருள்கள் குழந்தைகளை வளர்ச்சிப்படுத்தும். அதேசமயம் அந்தப் பரிசு வெற்றிக்கு மட்டுமே கொடுப்பது, குழந்தைகளால் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் செய்யவும் வழிவகுக்கலாம். அதனால், வெற்றிக்கு ஆடம்பர பரிசும் ஆர்ப்பாட்டங்களும் வேண்டாம். தோல்விக்கு ஊக்கமில்லா அமைதியான நிசப்தமும் வேண்டாம். காரணம் பார்த்து குழந்தைகளுக்குப் பரிசுக் கொடுப்பதைத் தவிர்த்து, அடிக்கடி பரிசுக் கொடுக்கலாம். அந்தப் பரிசு குழந்தைகளின் வெற்றி, தோல்வி இரண்டிலுமே சமநிலையில் இருக்க வேண்டும். இதுபோன்ற பரிசுதான் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாது; மகிழ்ச்சியையும் குறைக்காது. இதனால், குழந்தைப் பருவத்தை அவர்களால் மகிழ்ச்சியுடனும் அன்புடனும் கழிக்க முடியும்'' என்கிறார் பிரீத்தா நிலா.

மற்ற குழந்தைகளுடன் தன்னையும், தனக்குக் கிடைக்கும் பரிசுப் பொருள்களையும் ஒப்பீடு செய்து பார்க்காத வகையில் குழந்தையின் மீது அன்பு செலுத்த வேண்டியது பெற்றோர் கடமை. பரிசு வாங்கி மகிழ்ச்சி அடைவது போலவே, 'வெற்றிபெற்ற, சோர்வடைந்த நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பரிசுக் கொடுக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தினால், அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். 

அடிப்பது தீர்வல்ல - குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?

அடிப்பது தீர்வல்ல... அன்பின் வழியில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?



அன்பாக சிரித்து மகிழும் குழந்தைகள்

''குறும்புகளும், தவறுகளும் செய்றது குழந்தைகளின் இயல்பு. அதுக்காக பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பதும், கடுமையான வார்த்தைகளால திட்டுறதும் தீர்வாகாது.  மாறாக, குழந்தைகளோட சின்ன மனதுக்குப் புரியுற மாதிரி எடுத்துச் சொல்லி அவங்களை நல்வழிப்படுத்தணும்" என்கிறார், குழந்தைகள் நல ஆர்வலர் பிரீத்தா நிலா. அதை செயல்படுத்த அவர் தந்த ஆலோசனைகள் இங்கே.

''குழந்தைங்க தப்பு செய்யும்போது பெற்றோர்கள் அடிச்சா, தான் செஞ்ச தவறை அவங்க உணர மாட்டாங்க. தன் அப்பா, அம்மா தன்னை அடிச்சுட்டாங்க என்பதுதான் அவங்க மனசுல நிக்கும். அதனால, அவங்க செஞ்ச தப்பு என்ன, அதோட பிரீத்தா நிலாவிளைவுகள் என்னனு அவங்களுக்குப் புரியவைக்காம அவங்களை அடிக்கிறது, அவங்க நடவடிக்கையில் எந்த பலனையும் தராது.

இன்றைக்கு பெற்றோர் இருவருமே வேலைக்குப் போறாங்க. வேலை சூழல்ல நிறைய டென்ஷன். அது வீடு வரைக்கும் தொடரும். அந்த நேரத்துல குழந்தைங்க இயல்பா செய்ற சின்ன தப்பும், கோபத்தில் இருக்கும் பெற்றோருக்கு குற்றமா தெரியும். குழந்தைங்க மேல கோபத்தைக் கக்குவாங்க. இதனால சில பெற்றோரைப் பார்த்தாலே குழந்தைங்களுக்கு பயம் வரும். இந்தப் புள்ளியில் இருந்துதான் அவங்க பெற்றோரை விட்டு விலகியே இருக்க ஆரம்பிப்பாங்க.

குழந்தைங்கள நல்வழிப்படுத்தணும். அதேசமயம் குழந்தைங்களை முடிஞ்ச வரைக்கும் அடிக்கவும், திட்டவும் கூடாது. எப்படி? குழந்தைங்க ஏதாச்சும் தப்பு செய்றப்போ, அதை அவங்களுக்குப் புரியவெச்சு, சின்னதா ஏதாச்சும் தண்டனை கொடுக்கலாம். உதாரணமா, வீட்டுல சாக்பீஸ்ல ஒரு வட்டம் போட்டு, அதுக்குள்ள அவங்களை குறிப்பிட்ட நிமிஷம் வரை நிக்க வைக்கலாம். அப்போ அவங்ககிட்ட யாரும் பேசாத தனிமையை அவங்களுக்குக் கொடுக்கலாம். பொதுவா எந்த ஒரு குழந்தையும் தனிமையில இருக்கவும், ஒரே இடத்தில நகராம இருக்கவும் விரும்பாது. ஒருவேளை தான் தண்டனை வாங்கின தப்பை மறுபடியும் செய்யுற சூழல் வந்தா, 'அய்யோ அன்னைக்கு இதுக்குதானே பனிஷ்மென்ட் வாங்கினோம்'னு ஞாபகம் வந்து, அதைச் செய்ய மாட்டாங்க.

குழந்தை சேட்டை செஞ்சாலும், நாலு பேர் மத்தியில அதைச் சுட்டிக்காட்டி திட்டுறதைத் தவிர்க்கணும். தனியா கூப்பிட்டு கண்டிப்பதும், தவறை விளக்குறதும் நல்ல பலன் கொடுக்கும். பொதுவா இப்போதெல்லாம் பெற்றோர்கள், குழந்தைங்ககூட அதிக நேரம் செலவிடுவது இல்லை. அதுதான் இன்றைக்கு குழந்தைங்க செய்ற பெரும்பாலான தவறுக்குக் காரணம். குழந்தைங்களுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு தெரியாது. அவங்க வயசுக்கு தகுந்தபடி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக் கொடுத்துதான் புரியவைக்கணும்.

தினமும் தூங்க வைக்கிறப்போ குழந்தைங்க அன்னைக்கு என்னவெல்லாம் நல்லது செஞ்சாங்க, கெட்டது செஞ்சாங்கன்னு கதைகள் மூலமா, குழந்தைங்களை அதில் மறைமுக கதாபாத்திரங்களாக்கிச் சொல்லலாம். குழந்தைங்களுக்கு கதை ரொம்பப் பிடிக்கும். அது மூலமா நல்லது, கெட்டது சொல்றப்போ நிச்சயமா புரிஞ்சுக்குவாங்க.

ஒரு குழந்தை ஏதோ ஒரு தப்பை தொடர்ச்சியா செய்தா, அதோட விளைவை அது இன்னும் உணரலைன்னு அர்த்தம். அதனால அந்த தப்போட தீவிரத்தை அதுக்குப் புரியும்படியா எடுத்துச்சொல்லி, 'இப்போ நீ குட் பாயா இருக்க. இந்த தப்பும் செய்யாம இருந்தா உன்னை எல்லோரும் வெரி குட் பாய்ன்னு சொல்லி பாராட்டுவாங்க'ன்னு சொல்லி குழந்தையை மெல்ல மெல்ல நேர்வழிப்படுத்தலாம்.

'இன்னைக்கு ஒரு சேட்டை கூட செய்யல... பெஸ்ட் கிட்'னு சொல்லி, தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் குழந்தையின் கையில் ஸ்கெட்ச் கொண்டு ஸ்டார் போடலாம். சமர்த்தாக இருந்த நாளில், 'இன்னைக்கு உனக்கு அஞ்சு ஸ்டார்ஸ்' என்றும், 'இன்னைக்கு நீ ரெண்டு தப்பு செஞ்சேயில்ல... அதனால மூணு ஸ்டார்ஸ். நாளைக்கு சமர்த்தா இருந்து அஞ்சு ஸ்டார்ஸ் வாங்கணும் சரியா' என்றும் ஆர்வத்தைத் தூண்டலாம். தன் கையில இருக்கும் ஸ்டாரை நண்பர்கள், உறவினர்களிடம் குழந்தை காட்டி பெருமைப்படும். தொடர்ந்து, 'நீ வாரம் முழுக்க, மாசம் முழுக்க அஞ்சு ஸ்டார்ஸ் வாங்கினா, உன்னை அவுட்டிங் கூட்டிட்டுப் போவேன்'னு சொல்லி, அதன்படி நடந்துகொள்ளலாம். இதெல்லாம் அன்பின் பாதையில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான வழிகள்.

மாறாக, குழந்தை செய்யும் தவறை கண்டிச்சு, கண்டபடி அடிச்சு, திட்டும்போது குழந்தை மனசில் இறுக்கம்தான் அதிகமாகும். மேலும், பெற்றோரின் அந்த கோபத்தையும் அது கத்துக்கும். அதனால பள்ளியில் சக நண்பர்களுடன் ஏதாவது சண்டை வந்தா, தனக்குப் பிடிக்காத ஒன்றை நண்பர் செய்தா, தன் பெற்றோரின் நடவடிக்கை போலவே தானும் நண்பரை அடித்தோ, கடுமையான வார்த்தைகளால பேசவோதான் அந்தக் குழந்தை முயலும்.

அதனால, குழந்தைகளின் வழியிலேயே சென்று அவர்களை நல்வழிப்படுத்துவதுதான் சரியான குழந்தை வளர்ப்பு முறை!'' 

குழந்தைகள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள்

குழந்தைகள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள்



















குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு சொல்லலாம் பை பை!

குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு சொல்லலாம் பை பை!



'மலச்சிக்கல்' என்பது பொதுவான பிரச்னையாக இருக்கிறது குழந்தைகளுக்கு. பள்ளிக்குச் செல்லும் போதும், வெளியிடங்களுக்குச்  செல்லும் போதும் காலையிலேயே மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளால், அவர்களை அப்படிப் பழக்கப்படுத்தாத பெற்றோர்களால் இருவருமே சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இப்பிரச்னையை சரிசெய்ய மதுரை ஆயுர்வேத மருத்துவர் ஹரிணி அளிக்கும் டிப்ஸ்....

* காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரைப் பருகக் கொடுக்கலாம்.

* இரவு ஒரு டம்ளர் தண்ணீரில், 10 உலர் திராட்சையை ஊற வைத்து காலையில் ஊறிய உலர் திராட்சையைப் பிழிந்து, அத்தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கச் செய்யலாம்.

* காலையில் வெறும் வயிற்றில் 10 உலர் திராட்சையை உண்ணச் செய்து ஒரு டம்ளர் வெது, வெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம்.

* மதிய உணவுக்குப் பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து நார்ச்சத்துக்கள் நிறைந்த கொய்யா, பனங்கிழங்கு போன்றவற்றை உண்ணக் கொடுக்கலாம். இது மலச்சிக்கலை அறவே தீர்க்கும்.

* மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக பாதாம்பருப்பு, பேரீச்சை, முந்திரிப்பருப்பு, பிஸ்தா போன்றவற்றை ஊற வைத்தோ அல்லது அப்படியோ சாப்பிடக் கொடுத்தால் மலச்சிக்கல் தீரும்.

* துவரம்பருப்பு வேக வைக்கும் போது, ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி, பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும். பிறகு சாதத்தில் பருப்பை நெய் விட்டு பருப்பு சாதமாக கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

* காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கலாம்.

* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

* சூடான, காரமான, புளிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* பரோட்டா, பீட்சா, பர்க்கர் போன்று மைதாவில் செய்யப்படும் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

இவற்றையெல்லாம் தொடர்ந்து செய்தாலே உங்கள் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு பை பை சொல்லிவிடலாம்.

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா?

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா?



நமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது. வளர்இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளிகளாக மாறுவது என, குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். பெற்றோர் செய்வதை அப்படியே காப்பியடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங்களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்துகொள்வதும் இந்த வயதின் இயல்பு.

பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது. குழந்தைதானே அவர்களுக்கு என்ன புரியப்போகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம். சிறு வயதிலேயே பெண்ணுடல் பற்றித் தெரிந்துகொண்டால், அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கிற அம்மாக்கள் இருக்கிறார்கள்.

இது குறித்து மனநல மருத்துவர் மீனாட்சி கூறுகையில், ‘‘பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் ஆண், பெண் இருவருமே, அவர்கள் முன்பு டிரஸ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போதே அனைத்து விஷயங்களும் தெரியும். ஒரு வயதில் இருந்தே குழந்தையின் முன்பு டிரஸ் செய்வதை கட்டாயம்  தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு., எனவே அங்கு வளரும் குழந்தைகளுக்கு உடை என்பது பெரிய விஷயமாக ஈர்ப்பதில்லை. ஆனால் நம் நாட்டு குழந்தைகள் அப்படி வளர்க்கப்படவில்லை. சமூகமும் அதுபோன்று மாறவில்லை எனும்போது நாம்தான் குழந்தைகள் முன்பு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். உடை மாற்றும்போது நம்மை பார்க்கும் குழந்தைகளின் மனதில் அதிர்ச்சி ஏற்படும். அவற்றை அவர்களால் காட்டத் தெரியாது. அவை அப்படியே தொடரும்போது பாலியல் குழப்பத்துக்கு ஆளாவார்கள்.

குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் சூழலில் இருந்தே பெரும்பாலான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங்களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தைகளுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் போது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோரான ஆண், பெண் இருவருமே குழந்தைகள் முன் முகம் சுழிக்கும் படியாக உடுத்தக் கூடாது. எந்த சூழலிலும் கண்ணியமாக உடுத்த வேண்டும். மற்றவர்கள் மனதில் உறுத்தலை ஏற்படுத்தும் படி உடுத்துவது குழந்தைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

நல்ல விஷயங்களை உங்களது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான முன்னுதாரணமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்...

* உங்கள் குழந்தைக்கான இடங்களில் நீங்கள் அவர்களுக்கான நன்மதிப்பையும் கூட்ட கடமைப்பட்டவர்கள். குழந்தையின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கண்ணியமாக உடுத்துங்கள். இதுவே உங்களைப் பற்றியும், உங்களது குழந்தை பற்றிய எண்ணங்களையும், மற்ற குழந்தைகள் மனதில் பதிக்க காரணமாக அமையும்.

* எவ்வளவு கோபமான சூழலிலும் உங்கள் குழந்தைகள் முன்பு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.  பிறகு, அவர்களுக்கும் வழக்கமாக மாறிவிடும்.

* வீட்டில் கணவன், மனைவிக்குள் பிரச்னை இருந்தாலும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குழந்தைகளிடம்  மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதைத் தவிர்க்கவும்.  இது பெற்றோர் மீது குழந்தைகளின் மதிப்பீட்டை குறைக்கும்.

* மார்டன் என்ற பெயரில் குழந்தைக்கு டைட்டாகவும், மற்றவர்கள் முகம் சுழிக்கும் படியும் உடை உடுத்திவிடும் பழக்கத்தை கை விடவும். குழந்தைகள் கம்ஃபோர்டாக பீல் பண்ணும்படி டிரஸ் செய்வதே என்றும் நல்லது.

* உங்கள் குழந்தை கண்ணாடி போன்ற பொருட்களை எடுக்கும் போது, உடனே உடைத்து விடாதே என்று சத்தம் போட வேண்டாமே. அவர்களுக்கும் அது தெரியும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

* உங்கள் குழந்தையிடம் எந்த சூழலிலும் ‘நீ உருப்படவே மாட்ட’ என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது அவர்களது ஆளுமையையும், நம்பிக்கையையும் சிதைக்கும் வார்த்தை. குறைகளை மிகைப்படுத்தாமல் பாசிட்டிவாகப் பேசுங்கள்.

* வீட்டில் உங்களது குழந்தைக்கு என்று தேவையான விஷயங்கள் இருக்கட்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு திருடும் எண்ணம் ஏற்படும்.

* வீட்டில் உள்ள வேலைக்கார்களை நாம் மரியாதையாக நடத்த வேண்டும். நம்மையே நம் குழந்தைகள் பின்பற்றுகின்றனர். அவர்களிடம் அளவுக்கு அதிகமாக நெருக்கம் பாராட்டுவதையும் தவிர்க்கலாம். இது பின்வரும் ஆபத்துகளைத் தடுக்க உதவும்.

* உங்கள் குழந்தை வெளியில் செல்லும் போது, உங்களிடம் அனுமதி பெற்றுச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

* வீட்டில் மூடிய அறைகளுக்குள் நுழையும் போது அனுமதி பெறும் பழக்கம் அவசியம். நீங்களும் பழகிக் கொள்ளலாம்.

* புதிய சூழலையும், புதிய மனிதர்களையும் பணிவோடு அணுகும் பக்குவத்தை உங்களது குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள்.

இது போல் எந்தெந்த விஷயத்தில் உங்கள் குழந்தை பெட்டராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்களோ அதிலெல்லாம் உங்களை நெறிப்படுத்துங்கள் பெற்றோரே! 

உங்கள் குழந்தைகளிடம் இந்த 19 விடயங்களில் கவனம் வையுங்கள்!

உங்கள் குழந்தைகளிடம் இந்த 19 விடயங்களில் கவனம் வையுங்கள்!



1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.  ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய் அமையும் .

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி  உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.  ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

8. உண்மை, நேர்மை,  துணிவு,  விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,  அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை  ஊட்டுங்கள்.

9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.
கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த  சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,  சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.
இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

குறிப்பு:
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துகளாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தரமான  தீர்வை தர இயலாது.